திங்கள், 14 நவம்பர், 2011

தியானத்தின் முதல் படி -

தியானத்தின் முதல் படி -: வேடிக்கை பார்க்கக் கற்றுக் கொள்ளுதல்! :)


ஏற்கனவே எனக்கு நல்லா தெரிஞ்ச விஷயம்தானேன்னு சொல்றவங்க, மேலே படிங்க...

தியானம் என்கிற சொல்லில் இப்ப எல்லாருக்குமே ஒரு மயக்கம் இருக்கு :) தியானம் பண்ண பழகிக்கணும் அப்படின்னு எல்லாருமே நினைக்கிறோம். தியானம் பண்றது பற்றியும், அதனோட பலன்கள் பற்றியும், படிக்கவும் கத்துக்கவும், நிறைய வாய்ப்புகள் இருக்கு. ஆனாலும் எத்தனை பேரால அதை தொடர்ந்து செய்ய முடியுது என்பது கேள்விக் குறிதான். ஏன்னா, தியானம் என்பது தினசரி பயிற்சியினாலும், விடா முயற்சியினாலும்தான் கை கூடும். நம்மில் எத்தனை பேரால அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபட முடியுது?

முதல் பழி நேரத்தின் மேலதான். எனக்கு நேரமே இல்லை; எவ்வளவு வேலைகள் வரிசையா இருக்கு? இதில் உட்கார்ந்து தியானம்னு தனியா செய்ய எனக்கு எங்கே நேரம் இருக்கு? அப்படிங்கிறதுதான் முதல் காரணம்.

“ஒருவருக்கு ஒரு செயலைச் செய்யும் விருப்பம் இருந்தால், அவர் அதைச் செய்து விடுவார். இல்லையென்றால் அவரின் அந்த விருப்பம் உண்மையானதல்ல என்று பொருள்”, அப்படின்னு எங்கேயோ படிச்சிருக்கேன். ‘When there is a will, there is a way’.

நமக்கு எது ரொம்ப முக்கியமோ, எது ரொம்ப பிடிக்குமோ, அதை எப்படியும் செய்திடறோம். ஆனா மற்ற வேலைகளை எப்படியும் தள்ளி போட்டுடறோம். அதே போலதான் இதுவும்.

சரி... நமக்கு உண்மையிலேயே விருப்பம்தான், அதனால எப்படியோ இதுக்கு நேரம் கண்டு பிடிச்சிடறோம்னு வைங்க. அடுத்த தடைக்கல் என்ன?

நம்மோட பொறுமை(யின்மை).

இந்த அவசர உலகத்தில், நமக்கு எல்லாமே உடனே உடனே கிடைக்கணும். எதுக்குமே காத்திருக்கக் கூடிய பொறுமை யாருக்குமே இல்லை. (எனக்கும்தான் :)).

டிகாக்ஷன் போட யாருக்கு நேரம் இருக்கு? உடனடி காஃபி பவுடர் வந்த பிறகு நமக்கு அது எதுக்கு? நேரம் இல்லையா, திடீர் ரசப் பொடியை எடு. கரைச்சு விட்டு கொதிக்க வை. தலைக்கு குளிக்கணுமா? எண்ணெய் தேச்சு... சீயக்காய் போட்டு... எவ்ளோ வேலை! ஷாம்பூவைப் போட்டு குளி. சமைக்க நேரம் இல்லையா? உணவு விடுதிக்கு போய் சாப்பிடு. அதுவும் சாதாரண உணவு விடுதி கூட இல்லை, ‘விரைவு’ உணவு விடுதி. திடீர் விருந்தாளியா, கடைக்கு போய் தோசை மாவு, திடீர் சாம்பார் பொடி, இனிப்பு, இப்படி ஏதாவது வாங்கிடு. (இப்பல்லாம் திடீர் விருந்தாளியா போக முடியாதுங்கிறது வேற விஷயம் :). தொலைபேசி, சொல்லிட்டுதான் போகணும்!)

இந்த மாதிரியேதான், தியானம் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அதனோட பலனையும் instant-ஆ, உடனடியா எதிர்பார்க்கிறோம். ஆனா அது அவ்வளவு சுலபமில்லைன்னு தெரியும் போது, மனம் தளர்ந்து, முயற்சி செய்யறதையே விட்டுடறோம்.

தனியா இதுக்குன்னு உட்காரமலேயே எப்படி தியானத்தை விரும்ப கத்துக்கலாம்? விருப்பம் வந்திடுச்சுன்னா, மற்றதெல்லாம் பின்னாடியே வந்துடும். அதுக்கு, நம்ம மனசை ‘ருசி கண்ட பூனை’யாக்கணும் :)

அதுக்கு முன்னாடி, தியானம்னா என்ன, அதை எதற்காக பண்ணனும்னு நினைக்கிறோம், என்பதை பார்க்கலாம்...

(நான் expert-லாம் இல்லை. புரிஞ்சதை பகிர்ந்துக்கறேன். தவறு இருந்தால் தெரிஞ்சவங்க திருத்தணும்னு கேட்டுக்கறேன்.)

பொதுவாக சொல்லணும்னா, தியானம் என்பது எண்ணங்களை ஒருமுகப்படுத்தறதுதான். அதற்கு பலனா நாம எதிர்பார்க்கிறது (பெரும்பாலும்) மன அமைதிதான்.

எண்ணங்களை ஒருமுகப் படுத்துவது அப்படின்னு சொல்லும்போதே, ஒரு விஷயம் தெளிவாகுது. அதாவது, நம்மோட எண்ணங்களை நாமளே நல்லா புரிஞ்சுக்க வேண்டியது அவசியமாகுது. அது என்ன பெரிய விஷயம்கிறீங்களா? நிச்சயமா பெரிய விஷயம்தாங்க! ஒரு சில நிமிஷங்கள் உங்க எண்ணங்களை கவனிச்சு பார்த்தாலே எத்தனை பெரிய விஷயம்னு தெரிஞ்சிடும்.

மனம் என்பது குரங்குன்னு சரியாதான் சொல்லி வச்சிருக்காங்க. ஒரு விஷயத்தை நினைச்சுக்கிட்டே இருப்போம், திடீர்னு சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துக்கு தாவிடும், மனசு. இதுக்கு முன்னாடி என்ன நினைச்சுக்கிட்டிருந்தோம், அப்படின்னே கூட சில சமயம் மறந்து போயிடும்!

மனம் என்பதோட வேலையே எண்ணங்களை உற்பத்தி செய்யறதுதான். ஒரு நாளைக்கு, தோராயமா 40000 முதல் 50000 எண்ணங்கள் நமக்குள்ள ஓடுதாம். நினைச்சு பார்த்தா பிரமிப்பா இருக்குல்ல?

அவ்வளவு எண்ணங்களையும் எப்படி ஒருமுகப் படுத்தறது? அதுக்குத்தான் நாம எண்ணங்களை நாமே புரிஞ்சுக்கணும்.

இத்தனை ஆயிரம் எண்ணங்களில், நமக்கு positive energy கொடுக்கிற எண்ணங்கள் ரொம்ப குறைவுதானாம். முக்கால்வாசி எண்ணங்கள் உபயோகமில்லாத எண்ணங்கள்தானாம். அதாவது, கடந்த காலத்தை பற்றிய கவலை, அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம், இப்படித்தான் பெரும்பாலான எண்ணங்கள் இருக்குமாம்.

இப்படிப்பட்ட negative energy-யினால என்ன ஆகுது? இன்னும் கொஞ்சம் நமக்கு உற்சாகம் குறைவதும், கவலை அதிகமாவதும்தான் மிச்சம். அதனாலதான் ஆன்மீகத்தில், கண்டதையும் நினைச்சுக்கிட்டிருக்காம, முடிஞ்ச வரை இறைவனின் நாமத்தை நினைக்கச் சொல்றாங்க.

இந்த பயனில்லாத எண்ணங்களோட கூட, அடுத்து என்ன வேலை இருக்கு, அடுத்த வாரம் என்ன செய்யணும், அப்படின்னு திட்டமிடுகிற எண்ணங்களும் இருக்கும். நிகழ்காலத்தை பற்றி, இந்த நிமிஷத்தைப் பற்றிய சிந்தனை அபூர்வமாதான் இருக்குமாம்.

யோசிச்சு பார்க்கும்போது அது உண்மைன்னே தெரியுது... தினசரி வேலைகள் செய்யும் போதெல்லாம் பழக்கத்தினால நாம அவற்றை இயந்திரத்தனமா செய்யறோமே தவிர, நம்ம கவனமெல்லாம், நினைவெல்லாம், வேற எங்கேயோதானே இருக்கு? பாதி நேரம் சாவிக் கொத்தை எங்கே வச்சோம், பணத்தை எங்கே வச்சோம், இப்படி முக்கிய விஷயங்களில் கூட கவனமில்லாம, அவற்றை எங்கேயோ வச்சுட்டு, வேற எங்கேயோ தேடிக்கிட்டிருப்போம்.

சில சமயம் ஸ்லோகங்கள் சொல்லும்போதே கவனமில்லாம சொல்லி நிறைய வரிகளை விட்டுட்டு, வேற எங்கேயோ போயிடுவேன் :( சமயத்தில் ஒரு பாட்டில் ஆரம்பிச்சு வேற ஒரு பாட்டில் கூட போய் முடியும்! :( திடீர்னு அடடா, என்ன பண்றோம், அப்படின்னு திட்டிக்கிட்டு, மறுபடியும் ஆரம்பிப்பேன்.

அதனால, தியானம் செய்ய முயற்சிக்கிறதுக்கு முன்னாடி, முதல்ல செய்ய வேண்டியது – வேடிக்கை பார்க்க கத்துக்கறதுதான்! அதாவது நம்ம எண்ணங்களை நாமே மூணாம் மனுஷன் மாதிரி தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கறது.

ஒவ்வொரு நிமிஷமும் நாம என்னதான் நினைக்கிறோம், அப்படின்னு அப்பதான் நமக்கே தெரியும். நம்ம கவனமெல்லாம் நம்முடைய எண்ணங்கள் மேல இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில்... இதோ வேண்டாத கிளையில் ஏறப் போகுது மனசு, அப்படின்னு உணர ஆரம்பிக்கும் போதே, அதை திசை திருப்பி விடறது சுலபம்!

முதலில் சில நிமிஷங்கள் மட்டும் வேடிக்கை பார்க்கலாம்; பிறகு நாள் முழுவதுமே வேடிக்கை பார்க்கிறது கைவந்த கலையாயிடும். வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் இந்தக் கலை நமக்கு கை கொடுக்கும்! நிகழ்காலத்தை அனுபவிச்சு வாழ்வதற்கும், பழங்காலத்தை, துன்பங்களை மறப்பதற்கும், எதிர்காலத்தைப் பற்றிய கவலை, பயத்தை குறைப்பதற்கும், இப்படி.... இதனால பதட்டங்கள் குறைஞ்சு, மனசில் அமைதியும் அதிகமாகிக்கிட்டே வரும்...

பிறகு எண்ணங்களை ஒருமுகப்படுத்தறது என்பது ரொம்பவே சுலபமாயிடும்.

செய்து பார்த்துட்டு சொல்லுங்க. (ஏன்னா நான் இன்னும் செய்து பார்க்கலை! ஹி... ஹி...)

எல்லோரும் நல்லா இருக்கணும்!

அன்புடன்
கவிநயா